CSK: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்தவுடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று CMRL, MTC அறிவித்து உள்ளது.
மெட்ரோ ரயிலில் இலவச மற்றும் கூடுதல் நேரச் சேவைகள்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிஎஸ்கே (CSK) நிர்வாகத்துடன் இணைந்து ரசிகர்களுக்காக ‘ஸ்பான்சர்’ செய்யப்பட்ட இலவசப் பயணத் திட்டத்தை வழங்குகிறது. இதன்படி, போட்டி டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் தங்களது டிஜிட்டல் அல்லது காகித வடிவிலான டிக்கெட்டுகளை மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளில் (AFC Gates) ஸ்கேன் செய்து இலவசமாகப் பயணிக்கலாம்.
அரசு எஸ்டேட்
மைதானத்திற்கு மிக அருகில் உள்ள ‘அரசு எஸ்டேட்’ (Government Estate) மெட்ரோ நிலையம் வழியாக ரசிகர்கள் சென்று வரலாம். இரவு நேரப் போட்டிகள் முடிந்து ரசிகர்கள் வீடு திரும்ப ஏதுவாக, வழக்கமான நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்தச் சிறப்பு ரயில்கள் விம்கோ நகர் மற்றும் விமான நிலையம் ஆகிய இரு திசைகளிலும் தலா 1 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்துகளில் (MTC) இலவசப் பயணம்
மாநகரப் போக்குவரத்துக் கழகமும் (MTC) சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து, ரசிகர்களுக்குப் பேருந்து பயணச் சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி, செல்லுபடியாகும் போட்டி டிக்கெட்டுகளைக் காட்டி, குளிர்சாதன வசதி இல்லாத (Non-AC) மாநகரப் பேருந்துகளில் ரசிகர்கள் இலவசமாகப் பயணிக்கலாம். இந்தப் பயணச் சலுகை போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகத் தொடங்கி, போட்டி முடிந்து மூன்று மணி நேரம் வரை அமலில் இருக்கும். மேலும், அண்ணா சதுக்கம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலிருந்து ரசிகர்களுக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அண்ணா சிலையிலிருந்து மைதானத்திற்குச் செல்லச் சிறப்பு ‘ஷட்டில்’ (Shuttle) பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் சென்னையில் நடைபெறும் அனைத்து லீக் போட்டிகளுக்கும் பொருந்தும் என்பதால், ரசிகர்கள் தங்களது சொந்த வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி நெரிசலைக் குறைக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
