சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன்படி சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர் பட்டியலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. “ஒரு கட்சித் தொண்டனாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாடது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் தம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை. பாஜக பட்டியலில் மூத்தவர்களும் உள்ளனர். இளையோரும் இருக்கிறார்கள். சரியானவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதும் இல்லை. யாரும் புறக்கணிக்கப்படுவதும் இல்லை. வேட்பாளர்களை பாஜக தலைமைதான் முடிவு செய்கிறது. கட்சியில் பாரபட்சம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
