திருமாவளவன் தேர்தலில் போட்டியிடவில்லை? திமுகவின் அழுத்தமா? வேட்புமனு தாக்கலில் திடீர் மாற்றம் ஏன்? – is thirumavalavan not contesting the election why the sudden change in filing the nomination

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விசிக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Thirumavalavan Not Contesting(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கல் திடீர் மாற்றம்

திட்டமிட்டபடி இன்று (சனிக்கிழமை) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருந்த திருமாவளவன், அதனைத் திடீரென திங்கட்கிழமைக்கு (ஏப்ரல் 6) ஒத்திவைத்துள்ளார். இந்தத் திடீர் மாற்றம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

முடிவை மறுபரிசீலனை செய்கிறாரா திருமாவளவன்?

தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன.

கூட்டணி வியூகம்

கூட்டணிக்குள்ளான சில முக்கிய அரசியல் ஆலோசனைகள் காரணமாகவும், தனது முடிவை அவர் மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை வெளியாகப்போகும் முக்கிய முடிவு

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். எனவே, அன்று காலை அவர் தனது முடிவை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் போட்டியிடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக கட்சியின் மற்றொரு முக்கியப் பிரமுகர் அந்தத் தொகுதியில் களம் இறக்கப்படலாம்.

அறிவாலயத்தின் செக் – ஏன் இந்தப் பிடிக்காத நிலை?

திமுக தலைமையைப் பொறுத்தவரை, திருமாவளவன் ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தினால், அது கூட்டணியின் ஒட்டுமொத்தப் பிரச்சாரத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டம். அவர் ஒரு எம்.எல்.ஏ-வாக உள்ளே வருவதை விட, ஒரு ‘ஸ்டார் கேம்பெய்னராக’ வெளியே இருப்பதே திமுகவிற்கு லாபம் என அறிவாலயம் கணக்குப் போடுகிறது.

திமுக முக்கியப் பிரமுகர்களின் ஈகோ மற்றும் பயம்?

திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் சில அமைச்சர்களுக்கு, திருமாவளவன் சட்டமன்றத்திற்குள் நுழைவது தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவர் உள்ளே வந்தால், கூட்டணியில் விசிகவின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும் என்றும், எதிர்காலத்தில் இது தங்களுக்குச் சவாலாக அமையலாம் என்றும் அவர்கள் அஞ்சுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திருமாவளவனின் தர்மசங்கடம்

திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படும் இந்த மறைமுக அழுத்தம் காரணமாகவே, இன்று தாக்கல் செய்ய வேண்டிய வேட்புமனுவைத் திருமாவளவன் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது. “கூட்டணி தர்மத்திற்காகத் தனது ஆசையைத் தியாகம் செய்வாரா அல்லது தனது அரசியல் அடையாளத்திற்காகப் போட்டியிடுவாரா?” என்ற இக்கட்டான நிலையில் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

விசிக தொண்டர்கள் எதிர்பார்ப்பு

தலைவர் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு அவர் மாநிலம் முழுவதும் செல்வது அவசியம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.