காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை – திருமாவளவன் அறிவிப்பு

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 2026 சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது முடிவை அவர் மாற்றியுள்ளார். இதன்படி, தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“2006-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியிலே தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களும் பாண்டிச்சேரியில் ஒரு இடமும் என 10 இடங்களை பெற்று போட்டியிட்டோம். மணி சின்னத்தில் அப்போது நான் மங்களூர் என்ற திட்டக்குடி தொகுதி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவது என்று முடிவெடுத்து இருந்தேன்.

ஆனால், என்னுடன் களத்தில் நின்றவர் கடலூர் மாவட்டதில் ஏதேனும் தொகுதி வேண்டும் என்று கேட்டார். ஆகவே நான் கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தேன். இன்னும் வெளிப்படையாக சொல்வதானால், இப்போது காங்கிரஸ் மாநில தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகைக்காக ஸ்ரீபெரும்பதூர் தொகுதி வாங்கப்பட்டது. ஆனால் அவர் கடலூர் தொகுதி கேட்டதால் நான் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டேன்.

2006-ல் இது நடந்தது. ஒரு இடம் கிடைத்தாலும் நான் தான் போட்டியிட வேண்டும் என்று விரும்பும் அரசியல் களத்தில், நான் பெற்ற தொகுதியை விட்டுக் கொடுத்து விலகிய வரலாறு உண்டு. பதவியில் எனக்கு பெரிய பிடிப்பில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அப்போது நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் நான் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை போட்டியிடுகிற சூழல் அமைந்திருக்கும். 2009-ல் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதன் பிறகு நான் தனி சின்னத்தில் போட்டிடுவது என்பதில் உறுதியாக இருந்தேன்.

2006-ல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் சொன்னபோது நான் மறுதலித்தேன். தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்பதை உறுதியாக சொல்லிவிட்டு, மணி சின்னம் பெற்று வி.சி.க. போட்டியிட்ட 9 தொகுதியில் காட்டுமான்னார்குடி மற்றும் திட்டக்குடி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

2016-ல் மக்கள் நல கூட்டணியில் சட்டப்பேரவையில் போட்டியிடுகிற ஒரு சூழல் உருவானது. அப்போது நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் காட்டுமன்னார்குடியில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது. அப்போது தபால் வாக்குகளை முறையாக பெறாமல் போய்விட்டார்கள். 2016-ல் நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி இருந்தால், 2021-ம் ஆண்டிலும் நான் சட்டமன்றத்தில் போட்டியிட்டிருப்பேன்.

2019-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2021-ல் சட்டமன்றத்திற்கு போகலாம் என்ற உணர்வு மேலோங்கியது. ஆனால் நான் முடிவெடுக்கவில்லை. 2026 தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. இதில் வலது சாரிகளின் கைகள் ஓங்கியுள்ளன. திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார்கள். குறிப்பாக வி.சி.க. மற்றும் எனக்கு எதிராக பல திட்டங்களை தீட்டி, தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களை பிரிக்க முயற்சி செய்தார்கள். அனைத்தையும் தாண்டி, தி.மு.க. கூட்டணி இன்று கட்டுக்கோப்பாக களம் காண்கிறது என்றால் அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, குறிப்பாக திருமாவளவன் மிக முக்கிய காரணம் என்பதை நான் பெருமிதத்தோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த தேர்தலில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை கோருவீர்களா? என்று கேட்ட போது நான் திட்டவட்டமாக மறுதலித்தேன். கூட்டணியில் பலவீனம் உருவாகி விடக்கூடாது என்பதால் தான் நான் மறுத்தேன். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது நெய்வேலியில் அம்பேத்கார் சிலை முன்பு நான் 1999-ல் எழுப்பிய முழக்கமாகும். ஆனால் 2026-ல் அதற்கான சூழல் இல்லை.

சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போகிறேன் என்று சொன்னதும் பல ஊகங்களை கட்டவிழ்த்தார்கள். எம்.பி. பதவியை விட்டு, எம்.எல்.ஆ. பதவிக்கு ஆசைப்படுகிறார், துணை முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார், தொங்கு சட்டசபை ஏற்படும் என்று ஊகிக்கிறார், சட்டமன்றத்தில் இருந்தால்தான் கூட்டணி ஆட்சியை கோர முடியும் என்று நினைக்கிறார் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, வி.சி.க.வின் 4 சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது தி.மு.க.விற்கு அவர்கள் ஆதரவளித்ததால் தான் என்பது அவதூறு. சட்டமன்றத்தில் நான் சொல்லாதது எதையும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சொல்லவில்லை. நான் பேசியதைத் தான் எனது சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்த்ரைத்தார்கள். வி.சி.க.வின் அரசியலை சட்டப்பேரவையில் எடுத்து வைத்தார்கள். அவர்களின் பங்களிப்பை எண்ணி பெருமைப்படுகிறேன்.

நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததற்கு காரணம், நான் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் மட்டும்தான். கூட்டணி ஆட்சியை விரும்பினால் எம்.பி.யாக இருந்து கொண்டும் என்னால் செய்ய முடியும்.

அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேரை வெளியேற்றியது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதால்தான். அவர்களை நான் மாற்றியதற்கு நான் பின்பற்றும் சமூக நீதி கொள்கைதான் காரணம். இன்று சட்டசபை அலங்காரமாக இருக்கிறது என்றால் அதற்கு சிறுத்தைகள்தான் காரணம் என்று பல பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்கு முரண்பட்ட அரசியலை பேசவே இல்லை. வி.சி.க.வை பிடிக்காதவர்கள் பரப்புகின்ற அவதூறு அது.

நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில், மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார். இளையபெருமாள், இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். அவருடைய குடும்பத்தை கவுரவிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் இருந்தது.

ஆகவே, துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு பொறியாளர், ஜோதிமணி, நான் நிற்பதாக சொன்ன காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link