நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவருடைய மகன் நசின் உசேன் (வயது 35). இவர் முந்திரி பருப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், முகமது அஸ்மா (27) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரும ணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான முகமது அஸ்மாவுக்கு நேற்று முன்தினம் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
அவருக்கு சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும் என்று வீட்டில் இருந்தபடியே தனது மனைவிக்கு நசின் உசேன் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக இரவோடு இரவாக அந்த குழந்தையின் உடலை மையவாடியில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று காலையில் தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, நசின் உசேனை பிடித்து விசாரணை நடத் தினர். அதில், தனது மனைவிக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டி வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததும், இறந்து பிறந்ததால் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, நசின் உசேனை கைது செய்தனர்.
