பருவநிலைக்கேற்ற உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தியிருந்தாலும், இன்றைய வாழ்க்கை முறையில் அந்த பழக்கங்கள் பெரிதும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு சாப்பிடுவது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. ஆனால், கோடைகாலத்தில் அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போது எந்த வகை அசைவ உணவுகளை சாப்பிடலாம்..? எதை சாப்பிடக் கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடையில் அசைவம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலப்பிரச்சனை:
* ரத்தத்தில் டிரைகிளைசரைடுகள் அதிகரிக்கும்.
* ‘எல்.டி.எல்’ எனப்படும் கெட்ட கொழுப்பு உயரும்.
* இதயநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
* கொழுப்பு நிறைந்த உணவுகள் குடல் இயக்கத்தை மந்தமாக்கி செரிமான கோளாறுகளையும் உருவாக்கும் என கூறப்படுகிறது.
சிக்கன் மட்டன் தவிர்ப்பது நல்லது:
* ஹார்மோன் ஊசிகள் மற்றும் தீவனங்கள் மூலம் குறுகிய காலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை எந்தக் காலத்திலும் சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
* சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கருத்துப்படி, கோழிக்கறி உடலில் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஏற்கனவே வெப்பத்தில் இருக்கும் உடலில் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
* ஆட்டிறைச்சியும் செரிமானத்திற்கு கடினமானது என்பதால், கோடையில் அதைத் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.
நண்டு, இறால்: கோடைகாலத்தில் நண்டு, இறால் போன்ற உணவுகள் உடலில் எரிச்சல் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்ச்சத்து குறைபாடும் உருவாகலாம். இதனால் கோடையில் அதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எதை சாப்பிடலாம்..? அசைவம் சாப்பிட வேண்டிய அவசியம் இருந்தால், நெத்திலி போன்ற மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம். முட்டை அளவாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மீன் பொரியல், மசாலா, தந்தூரி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நீர்ச்சத்து மிக அவசியம்: மருத்துவர்கள் கூறுவதாவது: கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம். அதனால், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிக்க வேண்டும், மசாலா மற்றும் கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும். அதிக அசைவம் உட்கொள்வதால் சரும நோய்கள், வியர்க்குரு, தேமல் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
