சென்னை,
இயக்குநர் உமாபதி எஸ் ராமைய்யா இயக்கத்தில் நடிகர்கள் நட்டி நட்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்த அரசியல் திரைப்படம் டிஎன் 2026 தங்க நட்சத்திரம். இப்படம் முழுநீள அரசியல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவான இது, ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் டீசரில் “சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கிறது. விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்று இருப்பது போல தெரிகிறது என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகிறார்கள். நட்டி நட்ராஜ்ஜின் தோற்றம் விஜய் போன்றும், தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், டீசர் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இந்த படம் த.வெ.க.வினரை கோபப்படுத்தி உள்ளது. படத்துக்கு எதிராக விமர்சித்து வருகின்றனர். மேலும், அந்த படத்தை பார்க்க வேண்டாம் என கட்சியினருக்கு த.வெ.க. நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், ‘விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்துள்ள தணிக்கை வாரியம், அவரை அசிங்கப்படுத்தும் இப்படத்தை எப்படி வெளியிடலாம்?’ என,த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், ‘இப்படம் விஜயை விமர்சித்து உருவாக்கப் படவில்லை. விஜய் ஒரு சிங்கம்; நாங்கள் அவரை எப்படி கிண்டலடிக்க முடியும்? இப்படம் கடந்த அக்டோபர் மாதமே உருவானது. தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும், படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றனர்.
