மங்களூரு,
முதல்-மந்திரி விவகாரம் பற்றி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
மக்கள், எம்.எல்.ஏ.க்கள், நீங்கள் (பத்திரிகையாளர்கள்), ஒவ்வொருவரும் நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் கேட்க வேணடும். பட்ஜெட்டுக்கு பிறகு நான் முதல்-மந்திரி ஆவேனா என்ற கேள்விக்கு காலமே பதில் சொல்லும். கட்சி தலைவர்கள் வெளியூர்களுக்கு பயணிக் கும்போது அங்கு தாங்கள் நேசிக்கும் தலைவர் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.
இதில் என்ன தவறு உள்ளது. இவ்வாறு முழக்கம் எழுப்ப வேண்டாம் என்று அவர்களுக்கு உத்தரவிட முடியாது. மெட்ரோ ரெயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து எங்களுடன் விவாதிக்கவில்லை. மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைவராக மத்திய அரசு உள்ளது. நான் பெங்களூரு சென்றதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசிப்பேன். மக்களுக்கு தொந்தரவு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த நிறுவனத்தின் நிதி நிலை என்ன?, என்ன நடந்தது? என்பது குறித்து விவாதிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
