ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: ஆர்.காந்தி நாளை மனு தாக்கல் செய்கிறார்

சென்னை,

ராணிப்பேட்டை தொகுதியில் 1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.காந்தி. தற்போது அமைச்சராக இருக்கும் இவருக்கு 80 வயது ஆகிறது எனவே, அவரது வயோதிகத்தை கருத்தில் கொண்டு, 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் காந்திக்கு பதிலாக அவருடைய மகன் வினோத் காந்திக்கு இந்த முறை திமுக சீட் வழங்கியுள்ளது. ஆனால், மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அமைச்சர் ஆர். காந்தி அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.

திமுக தலைமையிடம் தொடர்ந்து தனக்கு சீட்டு வழங்கும்படி கோரிக்கை விடுத்து வந்தார். அமைச்சர் ஆர்.காந்தி சீட் கேட்டு விடாப்பிடியாக இருந்ததால் அவருடைய மகன் வினோத் காந்தியால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்களுக்கு கடைசி நாளாகும். தற்போது, திமுக தலைமை ஆர். காந்தியையே தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்சி சார்பில் வழங்கப்படும் ‘பி’ பார்ம் தற்போது அமைச்சர் காந்தி இடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, நாளை மனுதாக்கலின் போது அமைச்சர் காந்தியே வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணிப்பேட்டை தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி தான் என்று சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link