மனைவியை கொன்று உடலுடன் 2 நாட்கள் தங்கியிருந்த நபர்… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் தாபர்(வயது 38). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்த நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து உறவுக்கார பெண்ணான ரீமாபாய்(வயது 25) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜெகதீஷின் முதல் மனைவியும், குழந்தைகளும் தனியாக பிரிந்து சென்றுவிட்டனர்.

அதன் பிறகு 2-வது மனைவி ரீமாபாயுடன் ஜெகதீஷ் குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் ரீமாபாயுடன் அடிக்கடி ஜெகதீஷ் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சாப்பாடு விஷயம் தொடர்பாக ரீமாபாயுடன் ஜெகதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த ஜெகதீஷ், வீட்டில் இருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து ரீமாபாயை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரீமாபாய், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஆனால் கொலையை செய்துவிட்டு ஜெகதீஷ் எதுவும் நடக்காதது போல் ரீமாபாயின் உடலை கட்டிலில் போட்டு, அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். சுமார் 2 நாட்கள் இறந்துபோன மனைவியின் உடலை அவர் வீட்டில் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்களின் 2 குழந்தைகளும் அதே வீட்டில் தான்இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெகதீஷின் தந்தை காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீசார் விரைந்து சென்று ரீமாபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெகதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link