வாஷிங்டன்
தென்மேற்கு ஈரானில் உள்ள கோஹ்கிலுயே மற்றும் போயர் – அஹமத் மாகாணத்தில் பறந்த அமெரிக்காவின் எப்.15 இ ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
2 இருக்கைகள் கொண்ட அந்த எப்-15 ஸ்ட்ரைக் ஈகில் ரக விமானத்தில் இருந்த 2 விமானிகளும் அவசர பொத்தானை பயன்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேறினர். இதில் ஒரு விமானியை அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படைகள் பத்திரமாக மீட்டன. மற்றொரு விமானி மாயமானார்.
அவரை மீட்க அமெரிக்க படைகள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. அதேபோல் அமெரிக்க விமானியை சிறைபிடிக்க ஈரான் பாதுகாப்பு படைகள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
மேலும் அந்த விமானியை உயிருடன் பிடித்து கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று பொதுமக்களுக்கு ஈரான் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஈரானுக்குள் சிக்கிய விமானியை மீட்க அமெரிக்க சிறப்பு படைகள் தீவிர முயற்சியை மேற்கொண்டன. விமான மாயமான பகுதி, மலைப்பாங்கானது என்பதால் மீட்புப்பணி சவால் நிறைந்ததாக இருந்தது. இதற்காக ஏராளமான போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விமானங்கள், சக்திவாய்ந்த ஆயுதங்களை கொண்டதாகும். அந்த மலைப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது மாயமான விமானியிடம் இருந்த சிக்னல் கருவி மூலம் அவரது இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர். அப்போதும் ஈரான் படைக்கும், அமெரிக்க இராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் ஈரான் படைகளை சிதறடிக்க அமெரிக்க விமானங்கள் குண்டு வீசின. இதில் அந்த விமானியை ஈரான் படையிடம் சிக்கிவிடாமல் அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. சுமார் 36 மணி நேர தேடுதல் வேட்டையில் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.
எதிரி நாட்டுக்குள் நுழைந்து கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி விட்டு அதிரடியாக இறங்கி, சிக்கிய வீரரை பாதுகாப்பாக மீட்டு சென்றது ஹாலிவுட் படங்களில் மட்டுமே காணக்கூடிய சாகசம் ஆகும். அதை மிஞ்சும் வகையில்,சுமார் 36 மணி நேரத்திற்கும் மேலாக தன்னந்தனியாக சிக்கியிருந்த வீரரை அமெரிக்க படை மீட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
விமானியை மீட்டது எப்படி?
ஈரானில் சிக்கிய அமெரிக்க விமானியை மீட்பதற்கான துல்லிய திட்டங்கள் வகுக்கப்பட்டன. மீட்பு பாதையை பாதுகாக்கும் பல போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட விரிவான வான் பாதுகாப்புடன் ஒரு சிறப்பு காண்டோ பிரிவு சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த படையினர் மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அமெரிக்க போர் விமானிகளுக்கு உயிர் பிழைத்தல், தப்பித்தல், எதிர்த்தல் உள்ளிட்ட நுட்பங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இது அவர்களை மீட்புக்குழுக்கள் வந்ஹடையும் வரை எதிரிகளிடம் பிடிபடாமல் உயிர்வாழ உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உத்தியை ஈரானுக்குள் சிக்கிய விமானி பயன்படுத்தினார்.
விமானத்தில் இருந்து வெளியேறிய பிறகு மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஒரு இடத்தை தேர்வு செய்து மறைந்து கொண்டார். நவீன கருவி மூலம் அமெரிக்க படைகளை தொடர்பும் கொண்டார். மேலும் மீட்புக்குழுவினர் தனது இருப்பிடத்தை கண்டறிய உதவுவதற்காக சைகை முறைகளை பயன்படுத்தினார். விமானி இருப்பிடத்தை கண்காணித்த சிறப்பு படையினர் அங்கு சென்று அவரை பத்திரமாக மீட்டனர். அப்போது ஈரான் படைகளுடன் கடும் சண்டையும் நடந்தது.
இந்த மீட்பு நடவடிக்கையின்போது ஈரான் படைகளை திசை திருப்ப ஏமாற்று உத்தி பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு முயற்சியின் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை தவறாக அளித்து ஈரான் படையை குழப்பியதாக கூறப்படுகிறது.
