தலைவர்கள் – வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரம்: நளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது

சென்னை,

தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி உள்ளன.திமுக தலைமையிலான கூட்டணி, வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் அன்புமணியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். திமுக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கி உள்ள வேடாளர்களுக்கு இணையாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று தவெக, சீமான் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் வருகிற 21-ம் தேதி மாலையுடன் முடிவடைய உள்ளது. இதனால் இன்னும் 16 நாட்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியும் என்பதால் தலைவர்களும், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தை திட்டமிட்டு வேகப்படுத்தி உள்ளனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் ஆகும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், சீமான், ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் ஆகும். இன்று நிலவரப்படி 3,414 பேர் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Source link