திருச்சி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று (6-ந்தேதி) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் ஆகியவை தனித்தும் போட்டியிடுவதால் தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு தங்களது பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகரன் திறந்த ஜீப்பில் சென்று வீதி வீதியாக பிரசாரம் செய்து நேரடி வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனைக்கு பின்னரே முழுவிவரம் தெரியவரும். இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
