திமுக நிச்சயம் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும்- நடிகர் வடிவேலு

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாதிரிப்பள்ளி மைதானத்தில், ‘முதல்வர் கோப்பை’ என்னும் பெயரில் மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. இது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கடந்த 5- தேதி தொடங்கி வைத்தார்.

கடைசி நாளான நேற்று (பிப்.7) கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதைக் காண நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர். தொடர்ந்து, விளையாட்டில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி ஆகியோர் கோப்பைகளை வழங்கி கவுரவித்தனர்.

அப்போது பேசிய தேவயானி, மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளில் நான் எப்போதும் பங்கு பெறுவேன். குறிப்பாக, பெண்களுக்கான போட்டிகளில் பெண்களை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அந்த வகையில், இன்று நடைபெற்ற கபடிப் போட்டிகளில் பெண்கள் சிறப்பாக விளையாடினார்கள். பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் ஊக்குவிக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.

பெண்களை என்கரேஜ் செய்யும் வகையில் இதுபோன்ற பல்வேறு போட்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்த வேண்டும். அனைத்து பெண்களும் சிங்கப்பெண்கள்தான். போட்டி எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வதுதான் முக்கியமான ஒன்று, வெற்றி பெறுவது அல்ல என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய வடிவேலு, இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது மதுரை சித்திரைத் திருவிழாவைப் பார்ப்பது போல உள்ளது. இங்கு நடைபெற்ற பெண்களுக்கான கபடி போட்டியில், ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்குவது போன்று பெண்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். கபடி போட்டியில் கலந்து கொண்ட பெண்களை பெற்ற தாய்மார்களுக்கு நன்றி.

இந்த முதல்வர் கோப்பை போட்டிகள் வெறும் முதல்வருக்கான கோப்பை மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்குமான கோப்பை. 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அனைத்து மக்களுக்கும் நல்ல வாழ்வு அமைய உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக நிச்சயம் வெற்றி பெறும். 200 நிச்சயம், 200-க்கும் மேல் வெற்றி பெறுவது லட்சியம். பெண்களுக்கு அருமையான திட்டங்களை நிறைவேற்றியது திமுகதான். இந்த அரசு எப்போதும் தோற்காது, வெற்றி மேல் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link