பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. ஏ.ஆர் ரகுமான் சகோதரி வேண்டுகோள்

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார், மணி ஷர்மா உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்கள் இசையில் கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பாடகி சுஜாதா மோகன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட, மராத்தி, உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். ‘இன்னிசை குயில்’ என அழைக்கப்படுபவர் சுஜாதா மோகன். தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான பின்னணி பாடகியாக திகழ்கிறார்.

‘காதல் ஓவியம்’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாடகியாக அறிமுகமானவர் சுஜாதா மோகன். ரஜினியின் ‘ஜானி’ படத்தில் ‘ஒரு இனிய மனது’ என்ற இனிமையான பாடலை பாடியிருப்பார். ‘ரோஜா’ படத்தில் ‘காதல் ரோஜாவே’, ‘புது வெள்ளை மழை’ ஆகிய பாடல்களை பாடியிருந்தார் சுஜாதா.

இவர் கடந்த 1981-ம் ஆண்டு இசையமைப்பாளர் கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் இருக்கிறார். அவர் பிரபல பாடகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடகி சுஜாதா மோகன் விருது பெற்றார். அப்போது அவர் மேடையில் சொன்ன தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஜாதா மோகன் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை. அதற்கு காரணம், எனக்கு தொண்டையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதனால், என்னால் முன்பை போல் பாட முடியவில்லை” என்றார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி ரிஹானா, சுஜாதா மோகனை பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது,”என்னுடைய அம்மா இப்போ இருந்திருந்தா, சுஜாதாவுக்காக பிரேயர் பண்ணி கண்டிப்பா சரி பண்ணியிருப்பாங்க… அவர்களுக்கு சுஜாதா மீது அவ்வளவு பாசம். இந்த வீடியோவை பார்க்கும் டாக்டர்கள் யாராவது இருந்தா தயவு செய்து சுஜாதாவுக்கு உதவுங்க… அவருக்கு தொண்டையில் கஷ்டம் இருக்கு… அந்த குரல் மீண்டும் வரணும். ஆமா அவருடைய பாடல்களை மீண்டும் கேட்கணும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Source link