30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக் கான வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.தேர்தல் களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவைகளும், இந்தியா கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர த.வெ.க., நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. தேர்தலில் 4 முனைபோட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுவையில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி அப்போது பேசியதாவது:
புதுவைக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவம். நான் அடிக்கடி இங்கு வர ஆசைப்படுகிறேன். அதற்கு காரணம் உங்கள் அன்பு. புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பில் சேருவதற்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும். அரசாங்கம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். அனைவருக்கும் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நிறைவேற்றும் அரசாக காங்கிரஸ் அரசு இருக்கும். புதுவை மக்கள்தான் இங்கு ஆள வேண்டும்.6 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.இந்த மண்ணின் மனிதர்கள் ஆள வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதுவையை சேர்ந்தவர்கள் புதுவையை ஆட்சி செய்யவில்லை. எங்கோ இருந்து ஆட்சி செய்கிறார்கள்.
புதுவையை பாஜக ஆட்டிப்படைக்கிறது. அவர்களின் சித்தாந்தம் இங்கு திணிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது. புதுவையில் வழங்கப்படும் ஒவ்வொரு டெண்டருக்கும் ஆளும் கட்சி 30 சதவீதம் கமிஷன் பெறுகிறது” இவ்வாறு அவர் பேசினார்.
