அன்புமணி, தம்பிதுரை, எல்.கே சுதிஷ் உள்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் திமுகவை சேர்ந்த என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு மற்றும் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே. வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைந்தது.

தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பி.க்களையும், அதிமுக 2 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியிட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக ஒரு இடத்தை பாமகவிற்கு கொடுத்தது. இதில் அன்புமணி போட்டியிட மனு தாக்கல் செய்தார். மற்றொரு இடத்தில் தம்பிதுரை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் காலம் முடிந்த நிலையில், வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் இன்று மாநிலங்களவையில் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Source link