புதுவை தேர்தல்
இதனிடையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதே போல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை. மேலும் நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் போட்டியிடவுள்ளது.
நாளையுடன் பரப்புரை நிறைவு
இந்நிலையில் நாளையுடன் புதுச்சேரியில் பரப்புரை நிறைவடையவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர், அங்கு இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அந்த வகையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு பரப்புரைக்காக வருகை தந்துள்ளார். அவர் பேசுகையில், எப்போதும் புதுச்சேரிக்கு வருவது மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். இங்கு நான் அடிக்கடி வருவதற்கு ஆசைப்படுகிறேன். அதற்கு உங்களுடைய அன்பும், நட்பும் தான் காரணம்.
மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதி
புதுச்சேரியை சார்ந்தவர்கள் இங்கு ஆட்சி செய்யவில்லை. எங்கேயோ இருந்து புதுச்சேரியை ஆட்சி செய்கின்றனர். பாஜக ஆட்டிபடைக்கிறது. அவர்களுடைய சித்தாந்தம் இங்கு திணிக்கப்படுகிறது. மன்னர் போல் துணை நிலை ஆளுநர் ஆட்சி செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
கட்டணமில்லா பேருந்து திட்டம்
அதோடு புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2000 வழங்கப்படும். பெண்களுக்கு கட்டணமில்லாத இலவச பேருந்து சேவை. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல். அரசு பணியில் சேர்வதற்கு 40 ஆக வயது வரம்பு உயர்த்தப்படும். அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அமித்ஷா வருகை
ஒவ்வொரு குடும்பத்திற்கு இருபது லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. இதனிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று புதுச்சேரியில் பரப்புரையில் ஈடுபடவுள்ளது. இதற்காக இன்று மாலை 3.15 சென்னை விமான நிலையம் வரும், தொடர்ந்து புதுச்சேரிக்கு செல்லவுள்ளார். அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பரப்புரை
மேலும் தமிழ்நாட்டில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை புதுவை செல்லவுள்ளார். மாலை 5 மணி அளவில் புதுச்சேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இப்படி ஒரே நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து புதுவைக்கு படையெடுத்து வருவது அரசியல் களத்தினை பரபரப்பாக்கியுள்ளது.
