இந்த சூழலில்தான் “தேர்தல் அறிக்கை என்பது ஒரு சடங்காக இல்லாமல் தமிழக மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், வளர்ச்சியில் முக்கிய பங்கை ஆற்றக்கூடிய திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாகவும், மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் விளங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 71 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. இதில் ஊழல் ஒழிப்பு, போதை மற்றும் மது எதிர்ப்பு, வேலைவாய்ப்பு,கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், சமூக சீர்த்திருத்தத் துறை, LGBTQIA+ நலன் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அரசியல் தளத்தில் கவனம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி
தேர்தல் அறிக்கை வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் அறிக்கை என்பது ஒரு சடங்காக இல்லாமல் தமிழக மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், வளர்ச்சியில் முக்கிய பங்கை ஆற்றக்கூடிய திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாகவும், மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த தேர்தலில் அறிக்கைகள் விளங்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதி நிலைமை, மாநில அரசின் அதிகாரம் உள்ளிட்டவற்றை வைத்து எதார்த்த பூர்வமாக எங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என பல கட்சிகளின் தேர்தல் அறிக்கை உள்ளது. உழைக்கும் மக்களின் உரிமை குரல் சட்டமன்றத்தில் ஒழிக்க நல்ல வாய்ப்பாக இந்த தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்கிறது” எனவும் அவர் பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசுகையில், பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் போடுவேன் மாமன் சீர் தருவேன் என விஜய் சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம் எனவும் தப்பி தவறி விஜய் ஆட்சிக்கு வந்தால், வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்? அதற்கான நிதி நிலைமை என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் புதிதாக வருவாய் பெருக்க விஜய் என்ன திட்டம் வைத்துள்ளார் என எதையையும் சொல்லாமல் குழந்தைக்கு மோதிரம் போட போகிறேன் என விஜய் சொல்லியதை மக்கள் ஏமாந்து விடப் போகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்தார்.
விஜய் மீது விமர்சனம்!
தொடர்ந்து அவர் பேசுகையில், “பார்க்காததை பார்ப்பது போல விஜயை பார்க்க இளைஞர்கள் செல்வது என கூறுவது சரியானதுதான். விஜய் பனையூரை விட்டு வெளியே வரவில்லை அதனால் அவர் வெளியே வரும்போது பார்க்கிறார்கள். எப்படியாவது தாவிக்குதித்து அவரைப் பார்க்க வேண்டும் என அருகில் சென்று பார்க்கிறார்கள் எனவே இளைஞர்களுக்கு அரசியல் ஒழுக்கத்தை உருவாக்கும் வகையில் மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும்” எனவும் சண்முகம் பேசியுள்ளார்.
ஆளுநர் மீது விமர்சனம்
தொடர்ந்து ஆளுநர் குறித்து விமர்சனம் செய்த அவர்,”ஆளுநர் ஆர் என் ரவி பரவாயில்லை என்பது போல தான் இப்போது தமிழகத்திற்கு வந்துள்ள ஆளுநர் விளங்கி வருகிறார், ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளில் தற்போதைய ஆளுநர் கலந்து கொள்வது தெரிகிறது. வந்த சில நாட்களிலேயே ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் நேரடியாக ஆளுநர் கலந்து கொள்வது கண்டிக்க கூடியது. இந்த போக்கை ஆளுநர் கைவிட வேண்டும்.ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பாஜக முன் வைக்கிறார்கள். நாங்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை முன் வைத்து தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்” என சண்முகம் பேசியிருக்கிறார்.
