வெம்பக்கோட்டை அருகே வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கர பாண்டியபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை, நைஜீரியாவில் இருந்து கூழக்கூடா வகையிலான பறவைகள் நூற்றுக்கணக்கில் இங்குள்ள புளிய மரங்களில் உச்சியில் கூடுகட்டி வாழ்வது வழக்கம்.

ஏப்ரல் மாதத்தில் கடும்வெயில் ஆரம்பிக்கும் சமயத்தில் வர தொடங்கும் இந்த பறவைகள் வெப்பம் குறையும்போது அதாவது ஆகஸ்ட் மாதம் தங்களது தாய் நாடுகளுக்கு திரும்ப செல்லும். அதுவரை இங்குள்ள மரங்களில் தங்கி இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் பறவைகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த பறவைகள் பறக்கும் அழகை ரசிக்க வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்றனர்.

இந்த பகுதிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு இப்பகுதி மக்கள் எந்தவித தொந்தரவும் செய்யாமல் காப்பாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மரத்தின் அடியில் பட்டாசு வெடிக்கவோ, சிறு கல்லை விட்டு எரிவதற்கோ அனுமதிப்பதில்லை. இவ்வாறு பறவைகளின் பாதுகாப்புக்கு இக்கிராமத்தினர் காவலர்களாக இருந்து வருகின்றனர். இப்பறவைகள் உணவுக்காக வெம்பக்கோட்டை அணை, இருக்கன்குடி அணை, திருச்செந்தூர் கடலுக்கு சென்று மீன்களை கொண்டு வந்து உணவாக உட்கொள்கின்றன.

Source link