சாத்தான்குளம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறையினரும் குற்றவாளிகளே என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அனைவருக்கும் இரட்டை மரண தண்டனையும், அபராதமும் விதித்திருப்பதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. தமது தீர்ப்பின் மூலம் தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி நடு இரவில் காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளனர். இத்தகைய காவல் நிலைய மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்பாவிகள் இருவரை படுகொலை செய்திருப்பதற்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருக்கிறது. அந்த அறிவுறுத்தலின்படி அரிதிலும் அரிதான வழக்காக இந்த வழக்கை நீதிமன்றம் கருதுகிறது. இந்தப் பின்னணியில் நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

கொரோனா காலத்தில் விதிகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதால் இருவரும் மரணமடைந்தனர். இந்த படுகொலை தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், அன்றைய முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, இந்த கொடிய குற்றத்தைச் செய்த காவல்துறையினரை காப்பாற்றும் நோக்கத்தில், இருவரும் மூச்சுத் திணறலால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த படுகொலையை மூடிமறைக்கிற வகையில் மனிதாபிமானமற்ற முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உத்திகளை கையாண்டு நடந்து கொண்டதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது, ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

ஆனால், அன்றைக்கு அனைத்து எதிர்கட்சிகளும், தமிழக காவல்துறை இவ்வழக்கை விசாரித்தால் நீதி கிடைக்காது என்கிற கோரிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனையும், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூபாய் 84 லட்சம் அபராதமும் 6 ஆண்டுகள் கழித்து தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கொடூரமான சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்ததை நீதிபதி தமது தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார். இதன்மூலம் அவர் வகித்த முதல்-அமைச்சர் பதவியையே இழிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே, சாத்தான்குளம் படுகொலையை மறைத்து குற்றவாளிகளுக்கு துணைபோன எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்க அவர் தவறுவாரேயானால், இத்தகைய குற்றத்தைச் செய்த அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு உரிய பாடத்தினை புகட்டுகிற வகையில் தீர்ப்பினை வழங்க வேண்டும். இத்தகைய தீர்ப்பின் மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விட கொலைக் குற்றத்தை மறைக்க துணைபோன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய சட்டவிரோத குற்றத்தை செய்திருக்கிறார். இத்தகைய கொடிய குற்றத்தைச் செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது. அதேபோல, காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link