ஆலப்புழா
கேரளாவின் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், அன்னாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில், பி1 பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று பயணம் செய்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, குடும்பத்தினர் உடனடியாக டிக்கெட் பரிசோதகரான பெண் அதிகாரி ஜோதியை அணுகினர்.
விஜயவாடா பிரிவுக்கான டிக்கெட் பரிசோதகரான ஜோதி, உடனடியாக, தொடர்புடைய அதிகாரியிடம் விவரம் தெரிவித்து, மருத்துவ உதவிக்கான வசதிகளை செய்துள்ளார். ரெயிலிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில், அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அவசர சூழலை கவனத்தில் கொண்டு இலமஞ்சிலி ரெயில் நிலையத்தில், ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், கர்ப்பிணியின் தாயார் மற்றும் புதிதாக பிறந்த குழந்தை இருவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் இலமஞ்சிலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
