சிவகங்கை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் பிரச்சாரம் செய்திருந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீமான் இந்த முறை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காரைக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க.வுக்கு காரைக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காரைக்குடியில் இன்று கார்த்தி சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“காரைக்குடியை பொறுத்தவரை, கை சின்னத்தில் மாங்குடியும், குக்கர் சின்னத்தில் ஒரு வேட்பாளரும், புதியதாக வந்திருக்கும் கட்சியின் சார்பில் மற்றொரு வேட்பாளரும், நா.த.க. சார்பில் சீமானும் நிற்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சீமானுக்கு இங்கு ஓட்டு கிடையாது. சீமானுக்கு இங்கு சொந்த வீடு கிடையாது. அவருக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது.
தேர்தல் சமயத்தில் இங்கு வருவார், பின்னர் காணாமல் போய்விடுவார். கடந்தமுறை திருவொற்றியூரில் போட்டியிட்டார். அங்கு தோல்வியை தழுவினார். அதன் பின்னர் அவர் திருவொற்றியூரில் எட்டிகூட பார்க்கவில்லை. இங்கும் அப்படித்தான், தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார். அவர் திரும்பி வர மாட்டார்.
கடந்த முறை என்னை எதிர்த்து, அவர்கள் கட்சி சார்பில் ஒரு பெண் போட்டியிட்டார், தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவர் இந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை. சீமான் கட்சி இப்படித்தான். தேர்தல் சமயத்தில் டூரிஸ்ட் மாதிரி வருவார்கள், பின்னர் சென்றுவிடுவார்கள். எனவே இந்த தொகுதியில் நல்லது கெட்டது என அனைத்துக்கும் வருபவர் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிதான். சீமான் வந்தார் எனில், செட்டிநாடு விருந்து போட்டு, பிள்ளையார்பட்டிக்கு அனுப்பி விபூதி வைத்து அனுப்பி வைப்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
