சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் முதல் நாளில் 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களிடம் இருந்து 47 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2-ந்தேதி 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தமாக 67 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த 4-ந்தேதி 167 வேட்புமனுக்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று, அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத பலரும் ஆர்வமுடன் வந்து தங்களது வேட்புமனுக்களை அந்தந்த தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினார்கள். அந்த வகையில் நேற்று, துறைமுகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு (3 மனுக்கள்), தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா அசோக் (2 மனுக்கள்), தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் மகபுப் பாஷா, 8 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 17 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆதி ராஜாராம், தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் இர்பான் பாஷா, 12 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. தியாகராய நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியா மற்றும் 8 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 11 மனுக்கள் பெறப்பட்டது. எழும்பூர் தொகுதியில் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மகிழன்பன், 10 சுயேட்சைகள் உட்பட 18 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. திரு.வி.க.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் (3 மனுக்கள்), 11 சுயேட்சைகள் உட்பட 21 வேட்புமனுக்களும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் உள்பட 21 வேட்புமனுக்கள் பெறப்பட்டது.
ராயபுரம் தொகுதியில் நேற்று 11 சுயேட்சைகள் உட்பட 15 வேட்புமனுக்கள், அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சிற்றரசு (4 மனுக்கள்), 6 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 18 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. சைதாப்பேட்டை தொகுதியில் 6 சுயேட்சைகள் உட்பட 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 346 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. கடைசி நாளான நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 4 நாட்களில் மொத்தம் 628 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
