கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி: முதலிடத்துக்கு முன்னேறுவாரா வைஷாலி?

பெஜியா,

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 7 சுற்று முடிந்துள்ளது. ஆண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காத உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோவ் 6 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 டிரா) கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் பேபியானோ கருணா 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 3½ புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 5 டிரா, ஒரு தோல்வி) 4-வது இடத்தில் இருக்கிறார். இனி எஞ்சிய 7 சுற்றிலும் சிறந்த முடிவுகளை பெற்றால் மட்டுமே பிரக்ஞானந்தாவால் பட்டம் வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும்.

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் பிரக்ஞானந்தா இன்று நடக்கும் 8-வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதுகிறார். 8 வீராங்கனைகள் இடையிலான பெண்கள் பிரிவில் தமிழகத்தின் ஆர்.வைஷாலி கடைசி இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அவர் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடத்தில் இருக்கிறார். உக்ரைனின் அன்னா முசிசுக் 4½ புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 3½ புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார். வைஷாலி இன்று தனது 8-வது சுற்றில் கஜகஸ்தானின் பிபிசரா அசாபயேவாவை கருப்புநிற காய்களுடன் சந்திக்கிறார். இதிலும் வைஷாலி வெற்றி கண்டால் முதலிடத்தை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. திவ்யா தேஷ்முக், அன்னா முசிசுக்குடன் மோதுகிறார்.

Source link