சென்னை,
டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காந்தி கிருஷ்ணா, விஷால்- ரீமாசென் நடிப்பில் ‘செல்லமே’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பிரேக் பாஸ்ட்’ என்ற படத்தை காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதில் ‘பிக்பாஸ்’ ராணவ், ரோஸ்லின், கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாதன், அர்ச்சனா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரேம் கிளாசிக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் விரைவில் இந்த படம் ரிலீசுக்கு வர இருக்கிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் காந்தி கிருஷ்ணா கூறும்போது, “தற்போது திருமணம் பற்றிய புரிதல் இளைய தலைமுறையினரிடம் இல்லை. குறிப்பாக தாலியின் மகத்துவமும், பெருமையும் தெரியவில்லை. பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்துக்கு உதாரணமாக திகழும் தாலி இன்றைய தலைமுறையினர் மத்தியில் கேலி பொருளாக மாறிவிட்டது. பலர் வீடுகளில் காட்சி பொருளாக ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காதலின் உணர்வுகளை சொல்லும் இந்த படத்தில் திருமணம் மற்றும் தம்பதியிடையே உள்ள புரிதல்களை விவரிக்கும் விதமாக கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறோம்”, என்றார்.
