ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும்.. ஒருவேளை அந்த இரவு இன்றாக கூட இருக்கலாம் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையே போரை நிறுத்துமாறும், அமெரிக்க நட்பு நாடுகளுக்காக மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணையை திறந்து விடவும் ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காலக் கெடு விதித்திருந்தார். ஆனால் அவரின் எச்சரிக்கை மற்றும் காலக்கெடுவை ஈரான் நிராகரித்தது. இது குறித்து எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் கூறுகையில், “நாங்கள் வெறுமனே ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்பட மாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்து பேசினார், அதில், ஈரானில் சிக்கிய அமெரிக்க ராணுவ வீரரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ளோம். ஈரான் என்ற ஒட்டுமொத்த நாட்டை ஒரு இரவில் அழித்து விட முடியும்.. அந்த இரவு ஒருவேளை இன்றைய இரவாகக்கூட இருக்கலாம் என்று கூறினார்.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தள பதிவில், நாளை (அதாவது இன்று) செவ்வாய்க்கிழமையுடன் ஈரானுக்கான காலக்கெடு முடிகிறது என்றும், ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிடம் மின் நிலையங்களே இருக்காது,” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

Source link