'சென்டிமென்ட்' காரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்,

வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் 6 முறை போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக அமைச்சராகவும் இருந்து வருகிறார். அவரது தந்தை எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கடலூர் மாவட்ட திமுக முன்னோடிகளில் ஒருவர். காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவாக இருந்தவர்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி 1988-ல் வாங்கிய டி.ஏ.எப். 1333 பதிவு எண் கொண்ட அம்பாசிடர் காரை, ஒவ்வொரு தேர்தலுக்கும் பயன்படுத்துவார். குறிப்பாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அந்த காரை தானே ஓட்டிச் சென்று மனுதாக்கல் செய்வதை சென்ட்டிமென்டாக செய்து வருகிறார். தன் தந்தை 38 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அம்பாசிடர் காரை, அவர் தொடர்ந்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தன் தந்தை நினைவாக பராமரித்து வரும் ‘சென்டிமென்ட்’ அம்பாசிடர் காரை, வீட்டில் இருந்து தானே ஓட்டி வந்தார். குறிஞ்சிப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Source link