ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பிரீத்தி, பிரியா, அருந்ததி இறுதிப்போட்டிக்கு தகுதி

உலான்பத்தார்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான தென்கொரியாவின் ஏஜி இம்முக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரீத்தி மகுடத்துக்கான இறுதி சுற்றில் 3 முறை உலக சாம்பியனான ஹூவாங் சியோளவா வென்னை (சீன தைபே) எதிர்கொள்கிறார்.

60 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிரியா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நமூன் மோன் கோரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த பிரியா இறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் உன் கியோங் வோனை சந்திக்கிறார். இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் ஒய்ஷா தோய்ராவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.

51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில், 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான வூ யூ விடம் (சீனா) தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவரான இந்திய வீராங்கனை லவ்லினா (70 கிலோ) அரையிறுதியில் 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அஜிஜா ஜோகிரோவாவிடம் பணிந்தார்.

65 கிலோ எடைப்பிரிவில் அங்குஷிதா போரா 0-3 என்ற கணக்கில் சீன தைபேயின் நின் சின் சென்னிடமும், 50 கிலோ எடைப்பிரிவில் பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் நதேஜ்தா ரியா பெட்ஸ்சிடமும் தோல்வி அடைந்தனர்.

Source link