ஓட்டுக்கு பணம் வாங்குவீங்களா, அப்ப இந்த பட்டியலை பாருங்க..! நாம் தமிழர் கட்சியின் வித்தியாசமான விழிப்புணர்வு

சென்னை,

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு பக்கம், தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியும், “ஓட்டுக்கு பணம் வாங்காமல் தன்மானத்துடன் வாக்களியுங்கள்” என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திருவாடானை தொகுதியில் உள்ள புதுப்பட்டிணம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், “ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்குவோர் மற்றும் விற்போர் கவனத்திற்கு… இன்றைய சந்தை மதிப்பு, எருமை மாடு ரூ.55 ஆயிரம், பசு மாடு ரூ.45 ஆயிரம், ஆடு ரூ.10 ஆயிரம், நாய் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை, பன்றி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை.

ஆனால் தேர்தலில் மக்களின் விலை ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை. இது ஒரு பன்றியின் விலையைவிட குறைவு. அதை சிந்தித்து பணம் பெறாமல் தன்மானத்துடன் வாக்களியுங்கள்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

Source link