சசிகலா, ராமதாஸ் அணிக்கு உள்ளே இரண்டு வேட்பாளர்! நண்பர்களா? எதிரிகளா?- பின்னணி என்ன? – two candidates within the sasikala ramadoss camp friends or rivals what the background

2026 சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்து உள்ள ராமதாஸ் சசிகலா கூட்டணிக்குள் டபுள் வேட்பாளர்களால் புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.

Sasikala Ramadoss candidate issue(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மற்றும் நாமக்கல் தொகுதிகளில் சசிகலா மற்றும் ராமதாஸ் அணிகளிடையே ஏற்பட்டுள்ள வேட்பாளர் முரண்பாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

திண்டுக்கல்லில் இருவர் மனுக்கள் ஏற்பு

திண்டுக்கல் தொகுதியில் சசிகலாவின் அ.இ.பு.த.மு.க. சார்பில் ராமுதேவர் என்பவரும், பாமக ராமதாஸ் தரப்பில் ஆரோக்கியதாஸ் என்பவரும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். சசிகலா – ராமதாஸ் இருவரும் ஒன்றாகத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்று நடந்த பரிசீலனையில் இருவரது மனுக்களும் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் ராமதாஸ் – சசிகலா தரப்பு இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் குழப்பம்

இந்நிலையில், இந்த விவகாரம் அதிமுக கூட்டணியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமதாஸ் தரப்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஆரோக்கிய தாஸ் மனுவில் பாட்டாளி மக்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள அன்புமணியின் பாமகவிற்கும் இடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

நாமக்கல்லிலும் இதே குழப்பம்!

இதேபோன்று நாமக்கல் தொகுதியிலும் ராமதாஸ் அணியின் அபினேஷ் மற்றும் சசிகலா தரப்பின் பழனிசாமி ஆகிய இருவரது வேட்புமனுக்களும் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளன. ஒரே கூட்டணியில் இருந்து ஒரு தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

அடுத்த கட்டம் என்ன?

தொழில்நுட்பக் காரணங்களால் ஒரு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மற்றொருவர் களத்தில் இருக்க வேண்டும் என்ற பிளான் பி (Plan B) வியூகத்தின் அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது இருவரது மனுக்களும் ஏற்கப்பட்டுவிட்டதால், வரும் ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) மாலைக்குள் யாராவது ஒருவர் தனது மனுவைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிடும் தோழமைப் போட்டி உருவாகும் அபாயம் உள்ளது.