பாஜக இருக்கும் தே.ஜ கூட்டணிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு- தமிழக தேர்தல் களத்தில் டிவிஸ்ட்! – mamata banerjee backs aiadmk bjp alliance in tamil nadu political twist

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இந்திய தேர்தல் களம் பல விதமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மேற்குவங்க தேர்தல் பாரதிய ஜனதாவிற்கு மிக முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்திருக்கிறது.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவால் காலூன்ற முடியாமல் தத்தளித்து வருகிறது. மேலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தமிழகமும், மேற்கு வங்கமும் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

மம்தாவின் ஆசியோடு என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு!

இந்த சூழலில் தான் தமிழ் நாட்டு தேர்தல் களத்தில் மிக முக்கியமான ஒரு மாற்றம் நடைபெற்று இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பாஜக அங்கம் வகிக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் முழு ஆதரவை தரவிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் KIM ஹக்கீம் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் “அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அவர்களை மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக்க கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு முழு பலத்துடன் பாடுபடுவது என திரிணாமுல் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாகவும் இது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களின் ஆசியோடும் ஒப்புதலோடும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் ஹக்கீம் வெளியிட்டிருக்கிறார்.

ஸ்டாலினை விமர்சித்த மம்தா

இந்த சூழலில் தான் நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மம்தா, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அதன் காரணமாக தான் மேற்குவங்கத்திலிருந்து 500 -க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக பாஜக நியமித்துள்ளது என தெரிவித்த அவர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க போகிறேன் எனவும் பேசியிருந்தார்.

முற்றிலும் முரண்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜி தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது முற்றிலும் முரணாக பார்க்கப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் ஸ்டாலினை விமர்சித்த மம்தா இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் உறவு மாறுமா என விமர்சனங்களும் எழுந்த வண்ணமே உள்ளன.

மாணிக்கம் தாகூர் கருத்து

இந்த சூழலில் தான் காங்கிரஸ் குறித்தும் மு.க ஸ்டாலின் குறித்தும் விமர்சன கருத்து தெரிவித்திருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் பதில் அளித்து இருக்கிறார். மேற்குவங்க முதல்வர் மம்தாவின் கருத்து மிகவும் பொறுப்பற்றது எனவும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார். மேலும் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பது ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Source link