பெங்களூரு புறநகர் ரயில் சேவை: நெருங்கும் டெட்லைன்- ரொம்ப ஸ்லோவான நிலம் கையகப்படுத்துதல்! – bengaluru suburban rail project struggles with slow transfer for govt private lands

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் புறநகர் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அரசு மற்றும் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

KRIDE Suburban Rail Service Bengaluru Issues
இந்தியாவின் ஐடி தலைநகர் பெங்களூருவில் பொதுப் போக்குவரத்து வசதிகள் இன்னும் பற்றாக்குறையாக தான் இருக்கின்றன. ஒருபுறம் மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தாலும், தனிநபர் வாகனங்களால் சாலைகள் தினசரி கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றன. புதிய பாலங்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாநகரப் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்வதிலும், கடைசி மைல் தொலைவு என்ற இலக்கை நோக்கி நகர்வதிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

​K-RIDE பெங்களூரு புறநகர் ரயில் திட்டப் பணிகள்
​K-RIDE பெங்களூரு புறநகர் ரயில் திட்டப் பணிகள்

இத்தகைய சூழலில் புறநகர் ரயில் சேவை திட்டம் பெரிய வரப் பிரசாதமாக பார்க்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு பணிகள் தொடங்கிய நிலையில், அடுத்த 6 ஆண்டுகளில் முதல்கட்ட சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக இலக்கு நிர்ணயம் செய்து பணிகளை முடுக்கி விட்டனர். பெங்களூரு புறநகர் ரயில் சேவை திட்டத்திற்காக K-RIDE எனப்படும் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (கர்நாடகா) பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டு, அதன்கீழ் பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

L & T ஒப்பந்தம் திடீர் ரத்து
L & T ஒப்பந்தம் திடீர் ரத்து

இந்நிலையில் 6 ஆண்டுகால டெட்லைன் நெருங்கி வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதில் தொடர் சிக்கல்கள் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரயில் பாதைக்கான பணிகள் தள்ளி போடப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தால் L & T எனப்படும் லார்சன் அண்ட் டவுப்ரோ நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டது. நிலமே இல்லாமல் என்ன வேலை செய்வது? என்ற அதிருப்தி உடன் வெளியேறியது. இதனால் K-RIDE நிறுவனம் மீண்டும் டெண்டர் கோரி புதிய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மல்லிகே, கனகா ரயில் பாதை திட்டத்தில் இழுபறி
மல்லிகே, கனகா ரயில் பாதை திட்டத்தில் இழுபறி

பெங்களூரு புறநகர் ரயில் சேவை திட்டத்தின் கீழ் ”மல்லிகே” என்ற பெயரில் பென்னிகானாஹள்ளி – சிக்கபனவரா இடையில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு 14 ரயில் நிலையங்கள் உடன் பணிகள் நடந்து வருகின்றன. L & T தனது ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், பையப்பனஹள்ளி – சிக்கபனவரா இடையிலான பணிகளுக்கு டெண்டர் கோரி K-RIDE நிர்வாகம் காத்திருக்கிறது.

இதேபோல் ”கனகா” என்ற பெயரில் ஹீலாலிகே – ராஜானுகுன்டே இடையில் 46 கிலோமீட்டர் தூரத்திற்கு 19 ரயில் நிலையங்கள் உடன் வேலைகள் நடக்கின்றன. இதில் 57 ஏக்கர் நிலம் தேவைப்படும் சூழலில், 7.8 ஏக்கர் மட்டுமே இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.

முடியும் 2027 காலக்கெடு- மத்திய அரசு அளித்த பதில்
முடியும் 2027 காலக்கெடு- மத்திய அரசு அளித்த பதில்

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சிக்கபல்லபூர் எம்.பி கே.சுதாகர் எழுப்பிய கேள்விக்கு, தனியார் நிலம் கையகப்படுத்துதலில் இழுபறி நீடிக்கிறது. மாநில அரசிடம் இருந்து இன்னும் சிறிது நிலம் கைமாற வேண்டியுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களும் வரும் 2027ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினைகளால் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பெங்களூரு புறநகர் ரயில் – அடுத்தகட்ட வழித்தடங்கள்
பெங்களூரு புறநகர் ரயில் - அடுத்தகட்ட வழித்தடங்கள்

அடுத்தகட்டமாக ”சம்பிகே” என்ற பெயரில் கே.எஸ்.ஆர்.பெங்களூரு – தேவனஹள்ளி மற்றும் ஏர்போர்ட் ட்ரம்ப்ட் – கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் என இரண்டு வழித்தடங்களிலும், ”பாரிஜாதா” என்ற பெயரில் கெங்கேரி – ஒயிட்ஃபீல்டு இடையிலும் புறநகர் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில் ”சம்பிகே” வழித்தடத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. “பாரிஜாதா” வழித்தடத்திற்கு ஒப்புதல் கிடைத்த நிலையிலேயே தொடர்கிறது.