இந்த தேசம் உங்களை மன்னிக்காது.. மம்தா பானர்ஜி கருத்தால் கொந்தளித்த ஜோதிமணி.. கடும் கண்டனம் – congress mp jothimani condemns mamata banerjee speech about cm mk stalin

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் வரும் 23 மற்றும் 29 ஆம் தேதிகளில் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி , முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

மேற்குவங்க தேர்தல்
அதாவது திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மேற்குவங்கம் நாடியா மாட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி. அப்போது பேசிய அவர், பாஜகவுக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலே ரகசிய உடன்பாடு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு மேற்குவங்கத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேசினார்.

பாஜகவுடன் ரகசிய உடன்பாடு
அதோடு பாஜகவுடன் காங்கிரஸும் ரகசியமாக உடன்பாடு வைத்துள்ளது. மேற்குவங்கத்தில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை பாஜக நியமித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மேற்குவங்கத்தின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகிக்கும் மம்தா பானர்ஜி கொஞ்சமும் பொறுப்பில்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசுவது அபத்தமானது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி பேச்சுக்கு கண்டனம்
இது சம்பந்தமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை அவர் பகிர்ந்துள்ள பதிவில், தினந்தோறும் பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் நாங்கள் யுத்தம் நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் எங்களுடைய மொழி, இனம், பண்பாடு, வளர்ச்சி என அனைத்துக்கும் எதிராக உள்ள பாஜகவை தோற்கடிப்பதே எங்களுடைய இலக்கு. தமிழ்நாட்டில் அதிமுக முகமூடி அணிந்து பாஜக கால்பதித்து விடக்கூடாது என்பதில் எங்கள் மாநில மக்கள் உறுதியாக உள்ளார்கள்.

ஜோதிமணி எம்பி பதிவு
பாஜகவுக்கும், மோடி அரசுக்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை ராகுல்காந்தி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாஜகவுடன் சமரசமற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போராடி வருகிறார். அவர்களை பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக எப்படி கூறலாம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி. அதோடு தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் திமுக எப்போதும் எங்கள் பக்கமே உள்ளது.

கூட்டணி கட்சிகள் மீது அவதூறு
ஆனால் திரிணமுல் காங்கிரஸ் அப்படி இல்லை. ஆனாலும் பாஜகவிற்கு எதிரான யுத்த களத்தில் எதிர்கட்சிகள் ஒரே தளத்தில் பயணிக்க வேண்டும் என்பதால் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியது அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், 15 ஆண்டுகாலம் நீங்க செய்த சாதனைகளை கேட்டு வாக்கு கேளுங்கள். கூட்டணி கட்சிகளை அவதூறு செய்ய வேண்டாம் என உறுதியாக கூறியுள்ளார்.

எந்த மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறக்கூடாது
இந்தியாவை பாதுகாப்பதற்காக ராகுல் காந்தி தலைமையேற்று பாஜகவை தோற்கடிக்க அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நடத்தும் போராட்டத்தில் நீங்க பங்கேற்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம். இந்த தேசம் உங்களை மன்னிக்காது என காட்டமாக பதிவிட்டுள்ளார் ஜோதிமணி. அதோடு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறக்கூடாது என்பதே தன்னுடைய நிலைப்பாடு எனவும் ஜோதிமணி உறுதியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link