இலவசங்களுக்கு எதிராக சீமான் தொடர் பரப்புரை… தேர்தல் களத்தில் எதிரொலிக்குமா? – continuous campaign by seeman against freebies will it resonate in the election field

தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் களஞ்சியம் என்பவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேனாம்பேட்டையில் உள்ள தாமஸ் சாலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சீமான் பேச்சு

அப்போது நாதக ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், “பல்வேறு நாடுகளில் உரிமை இழந்து அடிமைப்பட்டு கிடந்த இனங்கள் எல்லாம் அரசியல் புரட்சி மூலம் கிளர்ந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் விடுதலை பெற்று உயர்ந்து சிறந்த பெருமையோடு வாழும் வரலாற்றில் நாம் பார்க்கிறோம். இங்கே பிறப்பது என்பது வேறு, வாழ்வது என்பது வேறு,சாதாரண மக்கள்தான் உலகில் புரட்சி ஏற்படுத்தி மாற்றம் செய்திருக்கிறார்கள்” என பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், திமுக ஆட்சி அதிகாரத்தின் செயல் திட்டம் இலவசம், மானியம், சலுகை,போனஸ் தான் உள்ளது. தமிழ்நாட்டில் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் தான் இருக்கிறது,மக்கள் அரசியல் இல்லை என விமர்சித்து இருந்தார். மேலும் அரசியலில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்,பெண்களுடைய வாக்கை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதனால்தான் மகளிருக்கு சலுகை அறிவிக்கிறார்கள் என பேசியிருக்கிறார்.

இலவசங்களுக்கு எதிராக பேச்சு

தேர்தல் வரும்போது மட்டும் தான் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மடிக்கணினி கொடுக்கிறார்கள்.மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் சென்ற வருடமே அவர்கள் மடிக்கணினி கொடுத்திருக்க வேண்டும். இதுதான் தேர்தல் அரசியலாகும், தேர்தல் சமயங்களில் மட்டும் தான் பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் ஐயாயிரம் ரூபாய் பணம் செலுத்தி இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லை என்றால் அவர்களுக்கான வேலையை உருவாக்க கூடியவர்தான் தலைவர் ஆவார். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். தலைவர்கள் மட்டும் தான் அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பார்கள்.

தற்போது சிங்கப்பூர், பின்லாந்து போன்ற நாடுகளில் மிகச் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறார்கள். உலகத்திலேயே மிகச்சிறந்த கல்வித்தரத்தை தமிழ்நாட்டில் தான் கொடுக்கிறார்கள் என்ற நிலையை நான் உருவாக்குவேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

நாம் தமிழர் ஆட்சியில் கட்டணமில்லாமல் குடிநீரை, கல்வி, மருத்துவம் நாங்கள் கொடுப்போம் என தெரிவித்த அவர், மற்ற கட்சிகள் பிரிட்ஜ் மற்ற இலவசங்களை அறிவித்து இருக்கிறார்கள் இதெல்லாம் தேர்தல் அறிக்கையா தமிழ்நாட்டில் படிக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள் சுடுகாடு மாதிரி இருக்கிறது, சுடுகாடுகள் தங்கும் விடுதி போல் உள்ளது. இல்லத்தரசி பெண்களுக்கு கேட்காமலே பணம் தருகிறது இந்த அரசு, ஆனால் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணம் கேட்டாலும் கொடுக்கவில்லை திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு நீங்க வாக்கு செலுத்தினீர்கள் அவர்கள் வென்றார்கள் நீங்கள் தோற்றுப் போய் உள்ளீர்கள் எனவும் அவர் பேசியிருக்கிறார்.

இலவசங்களுக்கு எதிராக சீமான் பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக இலவசங்களுக்கு எதிராக தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்த பரப்புரை தேர்தல் களத்தில் எடுபடுமா? வாக்குகளில் எதிரொலிக்குமா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன. தமிழக மக்களின் தற்போதைய மனநிலை என்னவாக இருக்கிறது என்பது கணிக்க முடியாததாக மாறி இருக்கிறது.

Exit poll பிறகு தான் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும் என்கின்றனர் விமர்சகர்கள். இந்த சூழலில் சீமான் முன்வைக்கும் மாற்று அரசியல் மக்கள் கவனம் பெறுமா என்று கேள்வி வலுக்க தொடங்கி இருக்கிறது. சில விமர்சகர்கள் திமுக அதிமுகவுக்கு எதிராக மாற்றம் விரும்பும் மக்களிடம் இவரின் பிரச்சாரங்கள் போய் சேரும் என கணிக்கின்றனர். விஜய் அரசியலுக்கு புதியவர் என்பதாலும் மேலும் விஜயின் மீது பல கட்ட விமர்சனங்கள் ஆரம்ப கட்டத்திலேயே வைக்கப்படுவதாலும் அவரை திமுக அதிமுகவிற்கு மாற்றாக பெரும்பான்மையான மக்கள் கருதவில்லை என சொல்லப்படுகிறது. எனவே சீமான் முன் வைக்கும் இலவசங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபட வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Source link