சென்னை,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். மேலும் இது ஒரு போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவித்தார்.
போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது. இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்காக வருகிற ஏப்ரல் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் தற்காலிகப் போர்நிறுத்தம் நிரந்தரமாகட்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இப்படியே நீடிக்கட்டும்; தற்காலிகப் போர் நிறுத்தம் நிரந்தரமாகட்டும்.ஹார்முஸ் நீரிணையும் அகந்தையால் அடைக்கப்பட்ட இதயங்களும் திறந்தே இருக்கட்டும். நாகரிகத்தின் பிறப்பிடமாகிய ஈரான் அநாகரிகத்தால் அழிந்துபடக் கூடாது.
உலகத்தின் எந்த விளிம்பில் போர் நிகழ்ந்தாலும் இன்னொரு விளிம்பில் எதிர்வினை இருக்கும். டென்மார்க்கில் ஒரு பசு பூச்சி மருந்தடித்த புல்லைத் தின்றால் ஆஸ்திரேலியாவில் சாக்லேட் தின்னும் குழந்தை சாகக் கிடக்கும். முடிவுக்கு வரட்டும் யுத்தம்.
ஏவுகணைகளையும் டிரோன்களையும் விடவும், பேச்சுவார்த்தைகள் வலிமையானவை. தோட்டாக்களில் தொடங்கிய போர் சொற்களில் முடியட்டும். கல்லெறிந்து விரட்டுங்கள் கழுகுகளை; தானியமிட்டுக் கூப்பிடுங்கள் புறாக்களை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
