தவெகவின் வாக்கு சதவீதம் இதுதானா.. பதில் சொல்வாரா நிர்மல்குமார்.. இடும்பாவனம் கார்த்திக் கேள்வி – ntk idumbavanam karthik questioned to tvk nirmal kumar

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்த முறை பல முனைகளில் போட்டி நிலவி வருகிறது. இது அரசியல் களத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவருடைய வருகை அரசியல் களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் சஸ்பென்ஸாகவே உள்ளது. இதனிடையில் நாம் தமிழர் கட்சி ஓட்டு வங்கி குறித்து தவெகவின் நிர்மல் குமார் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

நிர்மல்குமார் விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தவெகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு பதிலடி கொடுத்தார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தவெக தொண்டர்களுடைய ஆதரவு காரணமாக தான் சீமானுக்கு எட்டு சதவிகிதம் வாக்கு கிடைத்தது என்றார்.

யூடியூபர் போல் செய்லபடும் சீமான்
தொடர்ந்து அவர் பேசுகையில், விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் சீமான் இருந்ததால் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என்று வாட்ஸ் அப் குழுக்களில் தவெக தொண்டர்கள் பகிர்ந்தனர். இதன் காரணமாக தான் அவருக்கு வாக்கு கிடைத்தது. அரசியலில் வென்று மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் சீமானுக்கு கிடையாது. காமெடி செய்து வருகிறார். ஒரு யூடியூபர் போல் செயல்பட்டு வருகிறார். இந்த தடவை வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே நாதகவுகு கிடைக்கும்.

இடும்பாவனம் கார்த்திக் பதிலடி
இவ்வாறு கடும் விமர்சனங்களை முன்வைத்தார் நிர்மல்குமார். அவருடைய இந்த கருத்துக்கு எதிராக நாதகவினர் சோஷியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், வேதாரண்யம் தொகுதி வேட்பாளருமான இடும்பாவனம் கார்த்திக், நிர்மல்குமார் பேச்சுக்கு பதிலடி கொடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று முன்னாள் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி அசிங்கப்பட்ட கூமுட்டை என நிர்மல் குமாரை குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஒரே ஆண்டும் பாஜக, அதிமுக, தவெக என தாவியவர் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், தவெக துவங்குவதற்கு முன்பாகவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 6.58 % வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர். விஜய்யை கடுமையாக சீமான் விமர்சனம் செய்த பிறகு கடந்த 2025 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 24,151 (15.59 %) வாக்குகளை நாதக பெற்றது. அந்த தேர்தலில் விஜய்யின் தவெக கட்சியின் வாக்குகள் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார் இடும்பாவனம் கார்த்திக்.

இதுதான் வாக்கு விழுக்காடா
அதோடு அந்த தேர்தலில் தவெக தொண்டர்கள் நோட்டாவுக்கு வாக்கு செலுத்தினார்களா? அப்படி செலுத்தினார்கள் என்றால் நோட்டோவுக்கு 6,109 (3.94 %) வாக்குகள் விழுந்தது. இதுதான் தவெகவின் வாக்கு விழுக்காடா? இதுக்குறித்து நிர்மல்குமார் பதில் கூறுவாரா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார் இடும்பாவனம் கார்த்திக்.

தவெகவை விமர்சிக்க காரணம்
இதனிடையில் தவெக வருகை காரணமாக நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கி பாதிக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக இளைஞர்கள் பலரும் நாதகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால், நாதகவுக்கு போன வாக்குகள் தவெகவுக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்ச்சியாக நாதக விமர்சித்து வருவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link