மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் மலை தீபத்தூணில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி தீபம் ஏற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான கலெக்டர், போலீஸ் கமிஷனர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த அவமதிப்பு வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் விசாரணைக்கு நீதிபதிகள் சதீஷ்குமார்,ஜோதி ராமன் அமர்வு கடந்த மார்ச்17ம் தேதி இடைக்கால தடை விதித்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை உச்சி தீபத்தூண் அருகே மலர் தூவி வழிபட 5 பேரை அனுமதிக்க வேண்டும் என மற்றொரு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக கோவில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், மதுரை போலீஸ் கமிஷனர் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிப்பதா? இரு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் வரை, தனி நீதிபதி இவ்வழக்கை விசாரிக்கவும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொடர்பான அனைத்து வழக்கையும் ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடைகோரி பல்வேறு தரப்பினரும் மனு அளித்திருந்தநிலையில், “திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம். இரு தரப்பினரும் நீதிமன்ற விதிமுறைகளின்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். மக்களின் மத உணர்வுகளை பாதிக்க கூடிய விஷயம் என்பதால் கவனமாக கையாள வேண்டும். சட்டப்படி தேவையான தீர்வுக்காக மனு தாக்கல் செய்யுங்கள்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
