திருமாவளவன் பேச்சு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவனும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அந்த வகையில் தற்போதைய பரப்புரையில், திமுகவின் சமூக நீதி போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறேன். இந்த தேர்தலில் கூட எப்படியாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடலாம் என பலரும் முயற்சி செய்தனர்.
திமுகவை தோற்கடிக்க திட்டம்
என்னன்னவோ ஆசைக்காட்டி பார்த்தார்கள். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவனை வெளியேற்றினால் கூட்டணி சிதறி விடும். அதன்பின்னர் திமுகவை தோற்கடிக்கலாம் என்றெல்லாம் கணக்கு போட்டு பார்த்தார்கள். நான் பெரியார், அம்பேத்கரின் அரசியலை படித்தவன். ஆகவே தான் இந்த மண்ணில் சங்கபரிவார் கும்பலுக்கு இடமில்லை என்பதில் இறுதியாக இருக்கிறோம் என அழுத்தமாக தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி
அதோடு திமுகவுடன் எதற்காக கூட்டணியில் தொடர்கிறோம் என்பதை மணிக்கணக்கில் என்னால் பேச முடியும். அதே போல் பாஜகவுடன் எதனால் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை பற்றி எடப்பாடி பழனிசாமியால் பேச முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன். திமுக கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு முயற்சிகள் நடந்ததாக தொடர்ச்சியாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அரசியல் களத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
தேமுதிகவின் வருகையால் குழப்பம்
முன்னதாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில், ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் சீட்டுகளை குறைத்து கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனிடையில் விசிக இரட்டை இலக்கத்தில் சீட்டுகள் கேட்டு வந்த காரணத்தால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதனால் திருமாவளவன் கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என தகவல்கள் பரவியது. அதோடு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இருந்து அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சீட்டுகள் முக்கியமில்லை
இப்படி பல யூகங்களுக்கு மத்தியில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு கூட்டணி உறுதியானது. இதனையடுத்து எத்தனை சீட்டுகள் என்பது முக்கியமில்லை. தன்னால் இந்த கூட்டணி சிதறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார் திருமாவளவன். இந்நிலையில் தற்போது மீண்டும் ஆசைக்காட்டி தன்னை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கு முயன்றதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டி
இதனிடையில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட போவதாக அறிவித்தார் திருமாவளவன். தமிழக அரசியல் களம் மாறி வருவதால், சட்டமன்றத்தில் தன்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பதால் போட்டியிட போவதாக தெரிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் முடிவினை கைவிட்டார் திருமாவளவன். இதனையடுத்து காங்கிரஸை சார்ந்த ஜோதிமணி காட்டுமன்னார்கோயில் வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
