தமிழக வாக்காளர்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் வாக்குகள் இம்முறை ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கப் போவதாக தெரிய வருகிறது.
தவெக வருகையால் 2026 புதிய தேர்தல் களம்
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஏதாவது ஒரு புதிய விஷயங்கள் கவனத்தை ஏற்படுத்தும். அது கூட்டணியாக இருக்கலாம். புதிய அரசியல் சக்தியாக இருக்கலாம். பிரபலங்களின் தாக்கமாக இருக்கலாம். அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலும் புதுமாதிரியான தேர்தல் தான். ஏனெனில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் மூலம் முதல்முறை தேர்தலை சந்திக்கிறார். இதனால் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறையும். கடந்த தேர்தலிலேயே 3,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 24 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
நீங்க வேணா பாருங்க…இது தான் நடக்கப்போது! அந்த 21 தொகுதி தான் டிவிஸ்ட்! paraman
குறைந்த வாக்கு வித்தியாசம்
வெறும் 137 வாக்குகளில் தி.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.சத்தியநாராயணன் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். எனவே அரசியல் கட்சிகள் வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்கையும் மிக கவனமாக தங்களுக்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் வயது வாரியாக வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
| வயது பிரிவு | ஆண் | பெண் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| 18-19 | 7,62,308 | 6,96,632 | 99 | 14,59,039 |
| 20-29 | 54,93,148 | 52,22,764 | 2,545 | 1,07,18,457 |
| 30-39 | 57,49,744 | 58,60,998 | 2,748 | 1,16,13,490 |
| 40-49 | 57,29,921 | 61,69,006 | 1,316 | 1,19,00,243 |
| 50-59 | 49,72,475 | 54,10,814 | 645 | 1,03,83,934 |
| 60-69 | 32,17,690 | 35,51,790 | 257 | 67,69,737 |
| 70-79 | 16,17,836 | 18,17,706 | 97 | 34,35,639 |
| 80+ | 4,87,536 | 5,75,195 | 21 | 10,62,752 |
| மொத்தம் | 2,80,30,658 | 2,93,04,905 | 7,728 | 5,73,43,291 |
சிதறும் இளைஞர்களின் வாக்குகள்
இதில், மொத்த வாக்காளர்கள் 5.73 கோடி பேர். அவர்களில் 18 வயது முதல் 39 வயது வரை 2.38 கோடி பேர் இருக்கின்றனர். இது கிட்டதட்ட 41 சதவீதம். இதில் முதல்முறை வாக்காளர்கள், ஜென் ஸி தலைமுறையினர், இளைஞர்கள், அரசியல் சார்பற்ற நிலையில் இருப்பவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாக்குகள் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நாலாபுறமும் சிதறும். எந்த கூட்டணி அல்லது கட்சி பெருவாரியாக அறுவடை செய்கிறதோ, அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கிறது.
ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமல் தவிர்க்கக் கூடும். அப்போது வாக்கு சதவீதம் குறையும். அதேசமயம் 39 வயதுக்கு உட்பட்டவர்களிலும் அனைவரும் கட்டாயம் வாக்களித்து விடுவர் என்று சொல்ல முடியாது. ஒப்பீட்டளவில் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் வாக்கு செலுத்துவர். அந்த வகையில் இவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். 18 முதல் 39 வயது வரையிலான வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் தேர்தல் அறிக்கை மூலம் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஸ்விங் வோட்டர்ஸ் – கடைசி நேர ட்விஸ்ட்
அடுத்தகட்டமாக பிரச்சார களத்திலும் இளைய வாக்காளர்களை ஈர்க்க வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் 18 – 19 வயதுடைய வாக்காளர்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடியவர்களாக உள்ளனவர். எனவே அரசியல் கட்சிகளும், அவர்களின் ஐடி விங்குகள், தேர்தல் வியூக நிறுவனங்கள் முன்னெடுக்கும் சமூக வலைதள பிரச்சாரங்களால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும். இதன்மூலம் கடைசி நேரத்தில் முடிவை மாற்றக்கூடிய ஸ்விங் வோட்டர்ஸ்களாக இவர்கள் விளங்குகின்றனர்.
ஒட்டுமொத்த வாக்காளர்களில் பெண்கள் மட்டும் 2.93 கோடி பேர். அதாவது ஆண் வாக்காளர்களை காட்டிலும் 12.74 லட்சம் அதிகம் என்பதால், இவர்களும் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய சக்தியாக இருக்கின்றனர். இளைஞர்கள், ஸ்விங் வோட்டர்கள், பெண்கள் எழுதும் தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகத்தை யார் அடுத்து ஆளப் போகிறார்கள்? என்பதை வரும் மே 4ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
