தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்திருந்தோம். சில தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடுகளும் முறையாக எட்டப்பட்டிருந்தன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையோடு வேட்பாளர்களின் அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டன. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் மூலம் சான்றொப்பம் பெற்று, ஆவணங்கள் அனைத்தும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்க்கப்பட்டன.
சந்தேகங்களோ அல்லது குறைகளோ இருக்கிறதா என்பதையும் உறுதி செய்த பின்னரே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்புமனுக்களை நிராகரித்திருக்கின்றனர். வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் வேட்புமனுக்களை நிராகரித்திருக்கிறார்கள். ஏன் நிராகரித்தீர்கள் என்று எங்கள் வேட்பாளர்கள் கேள்விகளை எழுப்பியபோது மிக மிக சாதாரணக் காரணங்களையே சொல்கின்றனர். ஜனநாயக ரீதியாகப் போட்டியிட விரும்பும் எங்களைப் போன்ற கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே, அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நிராகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது”என்றார்.
