DC vs GT: வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற டெல்லி அணி கோட்டை விட்டது எங்கே?

படக்குறிப்பு, கோப்புப்படம்

21 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 14வது போட்டியில், குஜராத் அணி டெல்லி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணியின் சார்பில் சாய் சுதர்ஷன், கேப்டன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 12 ரன்களில் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஜோஸ் பட்லருடன் இணைந்து சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.

இருவரும் சேர்ந்து 32 பந்துகளில் 60 ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 7.3 ஓவர்களில் 79 ரன்களாக இருந்தபோது, ஜோஸ் பட்லர் குல்தீப் யாதவ் பந்தில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 192.59 ஆகும்.

அடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கி, சுப்மன் கில்லுடன் நல்ல கூட்டணி அமைத்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது.

சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அதிரடியாக ஆடியதால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

17.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 183 ரன்களாக இருந்தபோது, சுப்மன் கில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கிளென் பிலிப்ஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மிடில் ஆர்டர் கைகொடுத்ததால் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.

டெல்லி அணியின் பந்துவீச்சாளர் முகேஷ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…படக்குறிப்பு, கோப்புப்படம்

டெல்லி ஆட்டம் எப்படி?

பெரிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்தது. பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் இணைந்து 76 ரன்களுக்கு தொடக்க கூட்டணி அமைத்தனர்.

ஆனால், பதும் நிசங்கா 41 ரன்களில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 8.1 ஓவர்களில் 76 ரன்களாக இருந்தது.

அடுத்து களம் இறங்கிய நிதிஷ் ராணா 5 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் 10 ஓவர்களில் 101 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி சற்று திணறியது.

இருபுறமும் விக்கெட்டுகள் விழுந்தாலும், கே.எல். ராகுல் களத்தில் நின்று சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார்.

டேவிட் மில்லர் களம் இறங்கி, கே.எல். ராகுலுடன் கூட்டணி அமைத்தார்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுலின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். சதத்தை தவறவிட்ட அவர் 92 ரன்களில் அவுட் ஆனார்.

ஒருபுறம் டேவிட் மில்லர் சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்தாலும், மறுபுறம் நிலையான கூட்டணி இல்லாமல் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன.

கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விப்ராஜ் நிகம் பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

நான்காவது பந்தில் மில்லர் சிக்ஸர் அடித்ததால் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது.

டெல்லி அணிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் ஐந்தாவது பந்தில் மில்லரால் ரன் எதுவும் அடிக்க முடியவில்லை.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டெல்லி அணி விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

குஜராத் அணியின் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link