‘தலைமைச் செயலாளர் பணியிடமாற்றம் அரசியல் உள்நோக்கம் கொண்டது’ – செல்வப்பெருந்தகை

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தலைமைச் செயலாளரையும், உயர் காவல்துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

அரசமைப்புச் சட்டத்தின்படி, சுயேட்சையான, பாரபட்சமின்றி தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டில் இத்தகைய பணியிட மாற்றத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தை கைப்பிடியில் வைத்துக் கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை தடுத்து விடலாம் என பா.ஜ.க. இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்து வைத்திருப்பதால் தேர்தல் ஆணையத்தின் வரம்பு மீறிய இத்தகைய நடவடிக்கைக்கு உரிய பாடத்தை வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள். இத்தகைய பணியிட மாற்றத்தை செய்வதன் மூலமாக அ.தி.மு.க., பா.ஜ.க.வின் தோல்வி உறுதியாகியிருக்கிறது.

எனவே, எத்தகைய சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தினாலும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் நுழையவும் முடியாது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link