காவல் நிலையத்தில் வாலிபர் மரணம்; 8 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு – மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மும்பை,

மும்பை வடலா ரெயில்வே போலீசார், கடந்த 2014-ம் ஆண்டு கொள்ளை வழக்கு தொடர்பாக அக்னெல்லோ வால்டாரிஸ் என்ற வாலிபரையும், அவரது நண்பர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ் காவலில் இருந்தபோது அக்னெல்லோ வால்டாரிஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர் தப்பி ஓடியபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் கூறினர். ஆனால், அவர் போலீசாரின் சித்ரவதையால்தான் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டு, சம்பந்தப்பட்ட 8 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர ரத்தோடு உள்ளிட்ட 8 போலீசாரும் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.கட்காரி, ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து கீழ் கோர்ட்டு உத்தரவை உறுதி செய்தனர். அதில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-

“இறந்தவர்களால் நீதி கேட்டு கதறமுடியாது. அவர்களுக்காக நீதி கேட்பது உயிரோடு இருப்பவர்களின் கடமை. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் சொல்லப்படும் காரணங்களில் முரண்பாடுகள் உள்ளன. வாலிபர் உயிரிழந்தது கொலையா? அல்லது விபத்தா? என்பதில் பெரும் சர்ச்சை உள்ளது.

உயிரிழந்த வாலிபர் மற்றும் அவருடன் பிடிபட்டவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ ஆதாரங்களும், மற்றவர்களின் வாக்குமூலங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. கண்காணிப்பு கேமரா காட்சிகளும் முறையாக பாதுகாக்கப்படவில்லை.

எனவே, போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 8 போலீசார் மீதும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடரவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link