மும்பை,
மும்பை வடலா ரெயில்வே போலீசார், கடந்த 2014-ம் ஆண்டு கொள்ளை வழக்கு தொடர்பாக அக்னெல்லோ வால்டாரிஸ் என்ற வாலிபரையும், அவரது நண்பர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ் காவலில் இருந்தபோது அக்னெல்லோ வால்டாரிஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் தப்பி ஓடியபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் கூறினர். ஆனால், அவர் போலீசாரின் சித்ரவதையால்தான் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டு, சம்பந்தப்பட்ட 8 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர ரத்தோடு உள்ளிட்ட 8 போலீசாரும் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.கட்காரி, ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து கீழ் கோர்ட்டு உத்தரவை உறுதி செய்தனர்.
போலீஸ் காவல் மரண வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசார் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
