அண்ணாமலையே பெரிதுப்படுத்தவில்லை.. நானும் அவருடைய ஆதரவாளர் தான்.. ராம சீனிவாசன் ஓபன்டாக் – madurai south bjp candidate raama sreenivasan talk about annamalai

சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிற மாநிலத்தை சார்ந்த பாஜக முதல்வர்களும், அமைச்சர்களும் பரப்புரை செய்யவுள்ளனர். முன்னதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் ராம சீனிவாசன் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது வருகை தந்திருந்தார்.

மகாராஷ்டிர முதல்வர் சர்ச்சை பேச்சு
அப்போது எங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைத்தால் மதுரைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவேன் என பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாஜக வேட்பாளர் ஜெயித்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு திட்டங்களை கொண்டு வருவோம் என்று பேசுவது அப்பட்டமான மிரட்டல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் ராம சீனிவாசன், அண்ணாமலை வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசியுள்ளார்.

ராம சீனிவாசன் பேட்டி
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் இதெல்லாம் சகஜமான விஷயம் தான். அண்ணாமலையே இதெல்லாம் பெரிதுப்படுத்தவில்லை. அவரே 27 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களின் வெற்றிக்காக வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். தேவைப்பட்டால் பூத் ஏஜென்டாக கூட வேலை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுல எந்த பிரச்சனையும் இல்லை. எப்ப யார் போட்டியிடனும் என்பதெல்லாம் கட்சி தான் பேசி முடிவு செய்யும்.

27 தொகுதிகளுக்கும் அண்ணாமலை வேட்பாளர்
அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் என்டிஏ கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். அவர் நின்றிருந்தால் ஒரு தொகுதிக்கு வேட்பாளர். அவர் நிற்காத காரணத்தால் 27 தொகுதிகளுக்கும் அண்ணாமலையே வேட்பாளர் என தெரிவித்துள்ளார் ராம சீனிவாசன். மேலும், பாஜக வேட்பாளர்கள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது.

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தாமதம்
இது சம்பந்தமாக ராம சீனிவாசன் கூறுகையில், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் தாமதமாகவில்லை. காங்கிரஸ் கட்சியும் தான் தாமதமாக விட்டது. எங்கள் கட்சிக்கு என்று சில நடைமுறைகள் உள்ளது. மற்றபடி எந்த இழுபறியும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையில் கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டபாளையம் என இரண்டு இடத்தில், ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்பினார் அண்ணாமலை.

கோவையில் வானதி சீனிவாசன் போட்டி
இதற்காக அங்கு வேலைகளும் செய்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் கோவையில் பாஜகவுக்கு ஒரே தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. இதில் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணாமலை தேர்தலில் போட்டியிடும் முடிவினை கைவிட்டு, கட்சி தலைமையிடமும் இதுப்பற்றி தெரிவித்தார். இதனையடுத்து பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.

ஆதரவாளர்களுக்கும் சீட் மறுப்பு
இதனிடையில் அவருடைய ஆதரவாளர்களான அமர் பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி. சூர்யா, வினோத் பி செல்வம் உள்ளிட்டோருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்ற சர்ச்சைகளும் எழுந்தது. இதுக்குறித்து தற்போது பேசியுள்ள ராம சீனிவாசன், நானும் அண்ணாமலையின் ஆதரவாளர் தான். எனக்கு கட்சி தலைமை சீட் கொடுத்துள்ளது என விளக்கமளித்துள்ளார்.

Source link