தீவிரமடையும் அமெரிக்க – ஈரான் போர்: நாளை பாகிஸ்தான் செல்லும் அமெரிக்க குழு

வாஷிங்டன்,

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக நிலவும் சிக்கல்களைத் தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உயர்மட்டப் பேச்சுவார்த்தைக் குழுவை நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைக்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். இந்தக் குழுவில் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்

முன்னதாக இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் வலைதளத்தில், “மிகுந்த பணிவுடன் நான் அறிவிப்பது என்னவென்றால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விவேகமான நடவடிக்கையை நான் மனதார வரவேற்பதோடு, இரு நாடுகளின் தலைமைகளுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒரு உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்காக, அவர்களின் தூதுக்குழுக்களை (10.04.2026) இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அழைக்கிறேன். இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க ஞானத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். ‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்’ நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் இன்னும் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

Source link