233 தொகுதிகளில் போட்டியிடும் தவெக
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 233 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். இதனிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை எந்த கட்சியின் ஓட்டு சதவீதத்தை பாதிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனிடம் விஜய் வருகையால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். வாக்கு சதவீதம் குறையும் என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “அதிமுகவை விஜய் வருகையால் அசைத்து பார்க்க முடியாது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு மலை. விஜய் புதிதாக முளைத்த ஒருவர். எனவே அவர் மலை மீது மோதினால் விஜய்க்கு தான் மண்டை உடையும்” என பேசியுள்ளார்.
நேற்று வந்தவர் விஜய்
அதோடு விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு தான் அனுப்புவார்கள் என்றும் கூறியுள்ளார் வைகை செல்வன். சட்டசபைக்கு அனுப்ப மாட்டார்கள். மக்கள் பணியாற்றுபவர்களை மட்டும் தான் சட்டமன்றத்துக்கு அனுப்புவார்கள். விசில் அடிப்பவர்களை புதிதாக படம் ரிலீசாகும் தியேட்டருக்கு அனுப்புவார்கள். கட்சி துவங்கி பல நடிகர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். விஜய்யும், தவெகவும் நேற்று வந்தவர் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் வைகை செல்வன்.
அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சி
முன்னதாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து தவெக தரப்பில் இருந்து கூடுதல் இடங்கள் கேட்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மற்றொரு பக்கம் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளர்களாக ஏற்று கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி எனவும் தவெக நிர்வாகிகள் பேசி வந்தனர். இதனால் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வந்தது.
திமுக தவெக இடையில் போட்டி
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார் விஜய். அதோடு இந்த தேர்தலில் திமுக, தவெக இடையில் மட்டுமே போட்டி. வேற யாருமே களத்தில் இல்லை எனவும் பேசினார். அவருடைய இந்த கருத்தால் கடுப்பான அதிமுக நிர்வாகிகள், திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே. மக்களும் அதை நன்றாக உணர்ந்துள்ளார்கள் என பதிலடி கொடுத்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து திமுக, தவெக இடையில் மட்டுமே போட்டி என்ற பிம்பத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்டமைத்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கண்டனம்
இதனிடையில் நேற்றைய தினம் நெல்லையில் பேசிய விஜய் மீண்டும் திமுக, தவெக இடையில் தான் போட்டி என பேசினார். அதோடு உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கமே இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பாஜகவை எதிர்ப்பதற்கு துணிவற்ற நிலையில் விஜய் உள்ளார். எங்களுடன் கூட்டணி அமைப்பதற்கு திரைமறைவு முயற்சிகளை தவெக மேற்கொண்டது. ஆனால் விஜய் கொள்கை இல்லாதவராக இருந்த நிலையில், அந்த முயற்சி ஆரம்ப கட்டத்திலே நிராகரிக்கப்பட்டு விட்டது என தமிழக காங்கிரஸ், விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
