தேமுதிக பெரிதும் நம்பி கொண்டிருக்கும் தொகுதிகளில் ஒன்றாக விருதுநகர் மாறியிருக்கிறது. இங்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில் அவருக்கு சாதகமான அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேமுதிக கையிலெடுத்த மாஸ்டர் பிளான்
இதற்கு 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அமைந்த திமுக கூட்டணி வரப் பிரசாதம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சுதீஷ் மாநிலங்களவை எம்.பி சீட் பெற்று முதல்முறை டெல்லி அரசியலில் கால் தடம் பதித்துள்ளார். இதையடுத்து மாநில அளவில் அதிகாரம் பெற்ற சக்திகளாக உருவெடுக்க விருத்தாசலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணியில் தேமுதிக…மக்கள் கருத்து இது தான்?
விஜய பிரபாகரனுக்கு கிடைத்த வாக்குகள்
2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதேசமயம் இந்த தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாணிக்கம் தாகூருக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வாக்குகளை பெற்றிருந்தார். இதன் அடிப்படையில் தான் 2026 தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியை தேர்வு செய்திருக்கின்றனர்.
| வ.எண் | விஜய பிரபாகரனுக்கு பிளஸ் பாயிண்ட் |
| 1 | இந்த தேர்தலை பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்தின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்ற கணக்குடன் தேமுதிக களம் காண்கிறது. அருப்புக்கோட்டை அருகில் உள்ள ராமானுஜபுரத்தில் தான் விஜயகாந்த் பிறந்து வளர்ந்தார். எனவே இந்த மண்ணின் மைந்தன் நான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சென்டிமென்ட்டாக விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். |
| 2 | தெலுங்கு மொழி பேசும் நாயுடு சமூக மக்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். இவர்கள் தேமுதிகவிற்கு வாக்களிப்பர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. |
| 3 | முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்கு வங்கி கணக்கு சாதகமாக மாறும் என்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் 21,339 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2024 மக்களவைத் தேர்தலில் விஜய பிரபாகரனுக்கு கிடைத்த வாக்குகள் 3,80,877. |
அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் முக்குலத்தோர் வாக்குகள்
மறுபுறம் அதிமுகவை நிறுத்தியுள்ள வேட்பாளர் வி.ஜி.கணேசனையும் சாதாரணமாக எடை போட முடியாது. உள்ளூரில் செல்வாக்கு பெற்ற தொழிலதிபர். முக்குலத்தோர் வாக்குகளை நம்பி களமிறக்கியுள்ளார். அதிமுக – அமமுக கூட்டணி அமைந்திருப்பதால் இந்த வாக்குகள் கூடுதலாக கைகொடுக்கும் என நம்புகின்றனர். தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளும் முக்கியமானவை. இதை கவருவதற்காக மறைந்த பசுபதி பாண்டியனின் மகன் சந்தான பிரியாவின் ஆதரவை அதிமுக கூட்டணி பெற்றிருகிறது.
எடுபடாத தவெக, நாம் தமிழர் வேட்பாளர்கள்
இதுதவிர தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொள்ள வியூகம் வகுத்துள்ளனர். அடுத்ததாக தவெகவையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். விஜய்யின் அடையாளத்தை முன்னிறுத்தி உள்ளூர் முகமான பி.செல்வம் களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.லட்சுமணன் போட்டியிடுகிறார். இருப்பினும் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் பிரதான போட்டி என்பது தேமுதிக, அதிமுக இடையில் தான்.
