2026 தேர்தலில் மீனவர்கள் ஆதரவு… 40 தொகுதிகளில் 6 லட்சம் வாக்குகள்- சலுகைக்கு நோ, அடிப்படை வசதிக்கு யெஸ்! – fishermen communities expectations dmk aiadmk aids in 2026 tamil nadu assembly election

”வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு. முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும். இதுதான் எங்கள் வாழ்க்கை” என்று கவிஞர் வாலியின் வரிகளில் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் 1964ல் வெளியான “படகோட்டி” படத்தில் மீனவ வேடம் ஏற்று எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். இதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தான், 2026லும் தங்கள் வாழ்க்கை இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களின் வாக்குகளை கவருவதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளன.

தமிழகத்தில் 6 லட்சம் மீனவர்களின் வாக்குகள்

மீனவ வேட்பாளர்கள் ஒருபுறம், மீனவ சமூகத்தினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் மறுபுறம் என காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 14 கடலோர மாவட்டங்கள் இருக்கின்றன. அதில் 40 தொகுதிகள் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளன. மொத்தம் 608 கிராமங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 11 லட்சம் மீனவ மக்கள் வசித்து வரும் நிலையில், 6 லட்சம் வாக்குகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மீனவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் அதிமுக 22, திமுக 18 எனக் கைப்பற்றின. 2021 தேர்தலில் திமுக 34, அதிமுக 6 என முடிவுகள் மாறின.

EPS இறக்கிய புதிய வியூகம்…ADMK பலம் இது தான்?

மீனவர்களிடம் இருக்கும் சமூகப் பிரிவுகள்
வ.எண் மாவட்டங்கள் சமூகங்கள்
1 திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் பட்டணவர்
2 மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் பட்டணவர், செம்படவர்
3 புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி பரவர், கடையர், வலையர்
4 கன்னியாகுமரி முக்குவர், பரவர்
மீனவர்களின் வாக்கு வங்கிக்கு குறி

இந்நிலையில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களின் வாக்குகளை எப்படியாவது தங்கள் வசமாக்கி வெற்றி பெற வேண்டும் என்று திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலத்தில் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளன.

Lean Season எனப்படும் கடல் சீற்றம், மோசமான வானிலை, மீன்களின் வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் நிவாரணத் தொகையை 6,000 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். ஆனால் இதுபோன்ற அறிவிப்புகளை காட்டிலும், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மீனவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்
  • மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளம், ஏலம் விடும் அரங்குகள், வலை பழுதுபார்க்கும் இடங்கள், தரமான சாலை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்.
  • கடல் அரிப்பில் இருந்து தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர்கள், குறுகிய தூண்டில் வளைவுகள், பேரிடர் கால முகாம்கள் உள்ளிட்டவற்றுக்கு வழி செய்ய வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தங்களை தாக்கி கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும், வலைகளை சேதப்படுத்தியும் தொடரும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ரொக்கம், நிவாரணம் என்ற பெயரில் ஆர்வத்தை தூண்ட வேண்டாம் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டு பிரச்சார களத்தில் அரசியல் கட்சிகள் குதித்துவிட்டன. எனவே மீனவர்களின் வாக்குகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனைத் தொடர்ந்து ஆட்சியாளர்கள் என்ன செய்து தரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link